பெசோரா – இயேசுவே ஆதியிலிருந்து

Besorah / בְּשׂוֹרָה / “பெசோரா” என்கிற வார்த்தை எபிரேய வேதாகமத்தில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இவ்வார்த்தை ஆங்கில மூலத்தில் இருந்து “சுவிசேஷம்” அல்லது “நற்செய்தி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நற்செய்தி என்றால் ஆங்கிலத்தில் Good News அல்லது Gospel என்று பொதுவாக நாம் அறிவோம். உண்மையில் Gospel என்கிற வார்த்தைக்கு Goodspell என்கிற வார்த்தையே மூலம் ஆகும். அது போல் கிரேக்க மொழி வார்த்தை εὐαγγέλιον – இவான்ஜெலியோன், இதன் மொழிபெயர்ப்பே ‘நற்செய்தி’ ஆகும். Gladtidings என்கிற வார்த்தையும் ‘நற்செய்தி’ என்கிற பொருளில் பயன்படுத்தப்படும்.

நற்செய்தி என்பது வாய்மொழியாகவோ அல்லது எழுதப்பட்டதாகவோ நற்செய்தியைப் பிரகடனப்படுத்துவதாகும், பொதுவாக போரில் வெற்றி, அரசன் பதவியேற்பு, எதிரியின் மரணம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நேர்மறையான நிகழ்வை அறிவிக்கிறது. இந்த பிரகடனப்படுத்துதலை கிரேக்கத்தில்  κήρυγμα – கெருக்மா என்பர்.

நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு திருச்சபையில் புதிய உடன்படிக்கை(புதிய ஏற்பாடு) வாசிப்பின் மூலம் அறிமுகமாகிறார்.  அவர் ஆதி முதலே இருந்துள்ளார் என்பதை “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். – யோவான் 1:1-2ல்,  வாசிக்கிறோம். இதைக் குறித்த சிந்தனைகளின் விளைவே இப்பதிவு.

கிறித்தவ வாழ்வின் முக்கிய கடமை நற்செய்தி பகிர்தல் ஆகும். இந்தக் கிறிஸ்தவ செய்தி நான்கு நற்செய்தி நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இது இயேசுவின் சிலுவைப்பாடு மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் ஆகியவற்றால் கடவுளின் இரட்சிப்புச் செயல்களுடன் தொடர்புடையது, இது மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவருகிறது. இந்த நற்செய்தி நமக்கு கடவுள் கொடுத்த பரிசு மற்றும் இரட்சிப்புக்கான ஒரே வழி. 

அடுத்து பெசோரா என்கிற எபிரேய வார்த்தை மூலம் பற்றி பார்ப்போம்.

பெசோரா

முதலில், “பெசோரா” என்கிற வார்த்தை எதிரி நாடுகள் உடனான போரில் வெற்றியின் அறிக்கையை விவரிக்க பயன்படுத்தப்பட்டது (2 சாமுவேல் 4:10). இஸ்ரயேலர்கள் கடவுள் தங்கள் வாழ்க்கையில் (போர்கள் மற்றும் சண்டை, சச்சரவுகள் உட்பட) தீவிரமாக ஈடுபட்டார் என்று நம்பியதால், அது அதன் அர்த்தத்தில் உருவானது. போரில் இஸ்ரயேலின் வெற்றியின் நற்செய்தியை அறிவிப்பது, கடவுளின் எதிரிகள் மீது கடவுளின் வெற்றியை அறிவிப்பதாகும். வெற்றியின் பெருமை கடவுளுடையது என்று நம்புவது, வெற்றியைப் பற்றிய நற்செய்தியை இஸ்ரயேலர்கள் அறிவிப்பது இவை அனைத்தும் உண்மையில் கடவுளைப் பற்றியதேயாகும்.

கடவுள் தேசத்தை அதன் எதிரிகளிடமிருந்து விடுவித்தபோது இஸ்ரயேல் நற்செய்தியை அறிவித்தால், தனிப்பட்ட துன்பங்களிலிருந்து கடவுள் அவர்களை விடுவித்தபோது தனிநபர்களும் நற்செய்தியை அறிவிக்க விரும்புவார்கள் (சங்கீதம் 40:10). போரில் தேசத்தின் வெற்றிகள் மற்றும் ஒரு நபரின் தனிப்பட்ட வெற்றிகள் இரண்டும் கடவுள் செய்ததை அறிவிக்க அழைப்பு விடுத்தது.

இந்த வார்த்தையின் இராணுவ-அரசியல் மற்றும் தனிப்பட்ட அர்த்தங்கள், கடவுளுடைய மக்களின் பூமிக்குரிய எதிரிகளை வெற்றிகொள்ளும் மற்றும் இரட்சிப்பின் புதிய யுகத்தைத் தொடங்கும் ஒரு மீட்பரின் நம்பிக்கையில் முழுமையாக ஒன்றுபட்டன. இந்த மேசியாவின் வருகை ஒரு நல்ல செய்தியாக இருக்கும். இவ்வாறான இச்சொல்லின் பொருளின் முழு வளர்ச்சியை எபிரெய வேதாகமத்தில் ஏசாயா புத்தகம் குறிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா இஸ்ரயேலை விடுவிக்கத் தோன்றியபோது கடவுளின் கையிலிருந்து எதிர்பார்க்கப்படும் மீட்பு மற்றும் இரட்சிப்பை விவரிக்க இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது (ஏசாயா 52:7).

எபிரேய வேதாகமத்தில், Besorah / בְּשׂוֹרָה / “பெசோரா” என்பது Basar / בָּשָׂר / “பாசார்” என்ற வேரிலிருந்து வந்தது. “பாசார்” என்றால் “செய்தியைச் சுமப்பது” என்றும் “சதை, மாமிசம்” என்றும் பொருள்படும் . ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பு “சதை” என்று பொருள்படும் “பாசார்” வருகிறது. ஆதாம் ஏற்கனவே சதை மற்றும் எலும்பாக இருந்தான். (ஆதியாகமம் 2:21) அடுத்த மூன்று வசனங்களில் “…அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” ஆதியாகமம் 2:24ல் என்று வாசிக்கிறோம். இது எபிரேயத்தில் and they shall be one flesh / וְהָיוּ לְבָשָׂר אֶחָד என்று உள்ளது. இது திருமண நிகழ்வின் போது கட்டாயம் வாசிக்கப்படும் ஒரு வசனமாகும். இதில் மறைந்திருக்கும் ‘நற்செய்தி’யையே புதிய ஏற்பாட்டில் யோவான்  –  word / דָבָר / தாவார் – ‘வார்த்தை’ என்றும் அந்த ‘வார்த்தை’,  Basar / בָּשָׂר / பாசார் – சதை, மாமிசம் மனித வடிவெடுத்தது என்று உரைக்கிறார். பாசார் என்றால் ‘தோல்’ என்றும் பொருளுண்டு. ஆதி காலத்தில் நம் வேத வசன எழுத்துகள் யாவும் தோல் சுருள்களில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. அதுவே, ‘அவராக’ வார்த்தை ‘மெய்’யாகி இறைமகன் இயேசுவாக, மீட்பராக, நற்செய்தியாக, இவ்வுலகில் அவதரித்தார்.